Tuesday, October 21, 2014

எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன் மறைவு – தமிழ் படைப்பிலக்கியத்திற்கு பேரிழப்பு


எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன் மறைவு –
தமிழ் படைப்பிலக்கியத்திற்கு பேரிழப்பு

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு மிகப்பெரிய இழப்பாகும். தமிழ் படைப்பிலக்கியத்தில் அண்மைகால வரலாற்றில் தனித்த முத்திரை பதித்த மிகச்சிறந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள். களஆய்வு செய்து தொடர்புடைய அந்த அனுபவங்களை தன்னுடைய நாவல்களில் உயிரோட்டமாக பதிவு செய்தவர்.

உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர் பிரச்சனைகளை களஆய்வுசெய்து இவர் எழுதிய கரிப்பு மணிகள் மற்றும் அலை வாய்க்கரை என்ற நாவலும் பீகார் கொள்ளைக் கூட்டத்தினரின் பிரச்சனைகள் தொடர்பாக எழுதுவதற்கு அங்கு சென்று கொள்ளைக் கூட்டத் தலைவர் டாகுமான்சிங் மற்றும் பலரை சந்தித்து இவர் எழுதிய முள்ளும் மலரும் நாவலும் குறிப்பிடத்தக்க படைப்புகள்.

வேருக்கு நீர், குறிஞ்சித் தேன் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நாவல்களும் சிறுகதைகளும் எழுதியவர். காலம்தோறும் பெண்மை, யாதுமாகி நின்றாய், இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை போன்ற பெண்ணுரிமை சார்ந்த நூல்கள் எழுதியவர். மண்ணகத்துப் பூந்துளிர்கள் என்ற நாவலில் குழந்தைத் தொழிலாளர்களின் அவலங்களை பதிவு செய்துள்ளார். சிவகாசி தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் குழந்தை தொழிலாளர்கள் பற்றியும் பதிவு செய்துள்ளார். விடுதலைப் போராட்ட காலத்திலும் அதற்கு பிறகும் காந்தியத்தை பின்பற்றியவர்கள் அதற்கு மாறாக நடந்து கொண்ட வரலாறே வேருக்கு நீர் என்ற நாவல். காந்தியடிகளின் நூற்றாண்டு விழாவில் வெளிவந்த அந்த நாவலுக்கு 1973இல் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
வீடு என்ற நாவலில் தன்னுடைய சொந்த வாழ்க்கையின் நிகழ்வுகளை பதிவு செய்துள்ளார். இறந்தவர்களுடைய நூல்கள் தான் அரசுடைமையாக்கப்படும் என்ற விதியிலிருந்து விலகி எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் உடல் நலிவுற்ற நிலை காரணமாக அவருடைய படைப்புகள் 2009இல் அரசுடைமை ஆக்கப்பட்டன.

சமகாலத்தில் படைப்பிலக்கிய துறையில் தமிழ் மொழியை வளப்படுத்திய எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் படைப்பிலக்கியத்தில் மட்டுமல்லாது பெண்ணுரிமை, சனநாயகத்திற்கான களப்போராட்டங்களிலும் தன்னை இணைத்துக் கொண்ட அவரின் மறைவுக்கு தமிழ் கலை இலக்கியப் பேரவை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. 

உதயன்
(தலைவர், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை)